Thursday, September 4, 2014

ரைஸ் பக்கெட் சேலஞ்சை உருவாக்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதிக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரைஸ் பக்கெட் சேலஞ்சை உருவாக்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதிக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஐஸ் பக்கெட் சாலஞ்ச்' இணையத்தில், மெகா ஹிட்டாக இந்தியாவில் 'ரைஸ் பக்கெட் சேலஞ்ச்' என்ற பெயரில் ஏழைகளுக்கு ஒரு படி அரிசி தானம் வழங்கும் பிரச்சாரம் தொடங்கியது.
ஒரு வாலி நிறைய ஐஸ் கட்டிகள் கலந்த தண்ணீரை எடுத்து அதை அப்படியே தலையில் கொட்டிக் கொள்வது தான் ஐஸ் பக்கெட் சாலஞ்ச். ஏ.எல்.எஸ் (Amyotrophic lateral sclerosis) எனப்படும் நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேர்க்கவும் இந்த ஐஸ் பக்கெட் சவாலை பிரபலங்கள் பலர் மேற்கொண்டனர்.
இது இணையத்தில், மெகா ஹிட்டாக இந்தியாவில் 'ரைஸ் பக்கெட் சேலஞ்ச்' என்ற பெயரில் ஏழைகளுக்கு ஒரு படி அரிசி தானம் வழங்கும் பிரச்சாரம் தொடங்கியது. அதாவது உணவு தேவைப்படும் யாராவது ஒருவருக்கு ஒரு படி அரிசி, வழங்கி அதை படம் பிடித்து பேஸ்புக்கில் பதிவிட வேண்டும். அப்போது பிற நண்பர்கள் இதை செய்ய முன் வருகிறார்களா என்று சவால் விட்டு, அவர்களின் பெயர்களையும் அந்த பதிவில் டேக் செய்யலாம். அதன் மூலம் மேலும் பலர் இதை செய்ய முன்வருவார்கள் என்பதே இந்த சேலஞ்சின் நோக்கம்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதி (38) இவர்தான் ரைஸ் பக்கெட் சேலஞ்சை துவக்கிவைத்தவர். இவரது சமூக தொண்டை பாராட்டும் வகையில் அவருக்கு கர்மவீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஐகாங்கோ (iCONGO) தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பும், ஐ.நா.வும் விருதினை வழங்குகிறது.
இந்த விருது சிறிய காரியங்கள் மூலம் உலகில் பெரிய மாற்றம் ஏற்படுத்தும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
2015 மார்ச் 23-ல் டெல்லியில் நடைபெறும் விழாவில், மஞ்சுலதா கலாநிதிக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இத்தகவலை, ஐகாங்கோ நிறுவனர் ஜெரோனினோ அல்மைதா ’தி இந்து’ (ஆங்கிலம்) அனுப்பியுள்ள மின் அஞ்சலில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விருது எனக்கு ஊக்கமளிக்கிறது:
விருது குறித்து மஞ்சுலதா கூறுகையில்: "ரைஸ் பக்கெட் சேலஞ்ச் கர்மவீர் சக்ரா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நான், 'கூஞ்ச்' 'கிவ் இந்தியா' போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறேன். இந்த நற்செயலை மேலும் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். இந்த விருது எனக்கு மேலும் உத்வேகம் அளிக்கிறது" என்றார்.
'தி இந்து' (ஆங்கிலம்) இச்செய்தியை முதல் முறையாக வெளியிட்ட பின்னர் நாடு முழுவதும் இதற்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டது. மற்ற ஊடகங்களிலும் இது பிரபலமானது. மஞ்சுலதா தொடங்கிய இணையதளத்தை 5 லட்சம் பேர் விசிட் செய்துள்ளனர். 10,000 கிலோ அரிசி தானமாக வழங்கப்பட்டிருக்கிறது.
டோலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான பிரதீப் ஏற்கெனவே ரைஸ் பக்கெட் சால்ஞ்ச் மூலம் பெருமளவில் அரிசியை வழங்கியுள்ள நிலையில், தற்போது பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் ரைஸ் பக்கெட் சால்ஞ்சை ஆதரிப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 2 முதல் 7 வரை கோவா மாநிலத்தில் உள்ள பிர்லா அறிவியல், தொழில்நுட்ப நிலையமும் ரைஸ் பக்கெட் சேலஞ்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
நன்றி,
தி இந்து (பாரதி ஆனந்த்)


தொடர்புடைய செய்தி:
உலகெங்கிலும் பிரபலமடைந்துள்ள ஐஸ் பக்கெட் சவாலுக்குப் ("Ice Bucket challenge") பதிலாக இந்தியாவை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் 'ரைஸ் பக்கெட் சவால்' ("Rice Bucket challenge") என்ற புதிய விழிப்புணர்வுத் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். நரம்பு சம்பந்தப்பட்ட ஏஎல்எஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, அந்த நோய் தொடர்பான தொண்டு நிறுவனத்திற்கு நிதி சேகரிப்பதே ஐஸ் பக்கெட் சவாலின் நோக்கம். ஐஸ் பக்கெட் சவாலில் ஒருவர் தனது தலையில் ஐஸ் கட்டிகளுடன் கூடிய குளிர் நீரை ஊற்றிக் கொண்டு இன்னொருவருக்கு சவால் விடுப்பார்.
லூ கெரிக்ஸ் என்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்க்கு நிதி திரட்டித் தரும்விதமாக கடந்த மாதம் அமெரிக்காவில் தொடங்கிய ஐஸ் வாளிக் குளியல் என்ற சவால் நிகழ்ச்சி இதுவரை 100 மில்லியன் டாலர் நிதி உதவியினைக் குவித்துள்ளது. ஹாலிவுட் பிரபலங்களான டாம் குரூஸ், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், பில் கேட்ஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், டெய்லர் ஸ்விப்ட், ஷகிரா, கடி பெர்ரி, லேடி காகா, மட் டமோன், உசைன் போல்ட், கிசெலே புன்ட்சென், ஜஸ்டின் பெய்பர், மார்க் சக்கர்பெர்க், நெய்மர், கேட் மோஸ், டேவிட் மற்றும் விக்டோரியா பெக்காம் போன்ற பிரபலங்கள் இதுவரை இந்த ஐஸ் பக்கெட் சவால் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
உலகின் பல நாட்டினரும் இந்த சவாலை வரவேற்றுள்ள நிலையில், சீன மக்களிடையே இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது சவால் என்ற பெயரில் கேலன் கணக்கிலான தண்ணீரை வீணடிக்கும் செயல் என்று அங்கே கண்டனக் குரல் எழுந்து வருகிறது. ஆனால், எதையும் வீணடிக்காமல் ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாத நம் நாட்டின் ஏழைமக்களின் பசி நோயைப் போக்கும் விதமாக ஐதராபாத்தைச் சேர்ந்த மஞ்சு லதா கலாநிதி(38) என்ற பெண்மணி தொடங்கியுள்ள "ரைஸ் பக்கெட் சவால்", ஐஸ் பக்கெட் சவாலுக்கு இணையாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களின் வழியாக உலகளாவிய அளவில் வேகமாக பரவி, பிரபலமடைந்து வருகின்றது.
கொடுக்கும் சக்தி படைத்த யாராயினும், வசதி இல்லாத ஏழை ஒருவருக்கு ஒரு வாளி அரிசி கொடுக்க வேண்டும். அரிசி கொடுத்த புகைப்படத்தை 'பேஸ்புக்கில்' பதிவேற்றம் செய்கையில் ஆயிரக்கணக்கான 'லைக்'களும், 'ஷேர்'களும் குவிந்து அந்த கொடையாளரின் புகைப்படமும், இந்த செய்தியும் பரவத் தொடங்கி, புகழை நோக்கி இழுத்துச் செல்கின்றது.
தனது பங்குக்கு முதல் பயனாளிக்கு 20 கிலோ அரிசி வழங்கி இந்த அரிய சேவையை தொடங்கி வைத்த மஞ்சு லதா கலாநிதி, 'சமைக்காத அரிசி மட்டுமல்ல.., ஒரு பக்கெட் சமைத்த உணவு, வசதி இருந்தால் ஒரு பக்கெட் பிரியாணி, அல்லது சுமார் 100 ரூபாய் அளவிலான மருந்துகளை தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கி, யார் வேண்டுமானாலும் இந்த மக்கள் சேவையில் பங்கேற்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சவாலை ஏற்று தெலுங்கானாவின் கரீம்நகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கடந்த புதன்கிழமையன்று 2200 கிலோ அரிசியை ஒரே நேரத்தில் தானமாக வழங்கி சாதனை படைத்துள்ளனர். மேலும், இதுவரை நாடுதழுவிய அளவில் ஆயிரக்கணக்கான கொடையாளர்கள், இந்த திட்டத்தின் வாயிலாக லட்சக்கணக்கான ஏழை மக்களின் பசியை போக்கியுள்ளனர். இதன் மூலம் தண்ணீர் வீணடிக்கப்படுவதில்லை. மாறாக, வறுமைப் பேயை விரட்டி, பசி நோயை போக்கும் சமுதாயத்துக்கான சிறந்த மாற்று மருந்தாக இந்த சேவை கருதப்படுகின்றது.
மஞ்சு லதா கலாநிதி என்பவரின் மூளைக்குழந்தையான இந்த "ரைஸ் பக்கெட் சவால்" நிகழ்ச்சியில் பங்கேற்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.. உங்கள் வீட்டில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரிசியை நிரப்பி, தேவையுள்ள நபர்களுக்கு வழங்கி உதவுங்கள். அந்தக் காட்சியை புகைப்படம் எடுத்து, 'பேஸ்புக்'கில் பதிவேற்றம் செய்து, பிறரும் இந்த நல்லபழக்கத்தை கடைபிடிக்க உதவுங்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.